சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

 *சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை*


*தொடர்0️⃣4️⃣*


#சீதனத்தால்_ஏற்படும்_கொடுமைகள்.


தலை தூக்கி, கொடிகட்டிப் பறக்கும் இந்த சீதனக்கொடுமை, இன்று சமுதாயத்தில் ஏற்படுத்தி இருக்கும் சீரழிவுகளையும் அவலங்களையும் நடுநிலை கண்ணோட்டத்தோடு சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் நிச்சயமாக இதை வெறுத்தொதுக்குவான்.


🔘 எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்துக்கு முன்பு ஜாஹிலிய்யதுடைய காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்தால் எவ்வாறு ஒரு அச்சம் ஏற்படுமோ, அவ்வாறு இன்று ஒரு பெண் குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு ஒரு அச்சம் ஏற்படுகின்ற நிலைமை வந்துள்ளது.


🔘 ஒரு பெண் பிள்ளை பிறந்து விட்டால் ஒரு வயது இரண்டு வயதிலேயே அந்தப் பெண் பிள்ளைக்கான வீடு கட்டப்பட ஆரம்பிக்கின்றது.


🔘 தான் பெற்றெடுத்த பெண் மக்களை எப்படியும் மனக்கோளத்தில் காண வேண்டும் என்பதற்காக தன் மானத்தை துறந்து ஊர் ஊராக, தெருத்தெருவாக, வீடு வீடாக, ஏன் பள்ளிவாசல் பள்ளிவாசலாக கையேந்தி பிச்சை கேட்கும் பெற்றோர்கள் ஆயிரமாயிரம்.


🔘 வட்டிக்கு கடன் வாங்கி, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக வாரிக் கொடுத்துவிட்டு, வாங்கிய கடனையும் வட்டியையும் செலுத்த முடியாமல் தற்கொலை மூலம் தன் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்ட பெற்றோர்கள் ஆயிரமாயிரம்.


🔘 வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கு வழியில்லாத போது, வரப்போகும் கணவனுக்கு சீதனமாக எங்கிருந்து பெற்றோர்களால் கொடுக்க முடியும்? உடன்பிறந்தோருக்கோ பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடிவைத் தேடிக் கொண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம்.


🔘 சீதனம் கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் என்ற வழமையை செல்வந்தர்கள் உருவாக்கி இருக்கும்போது சீதனத்தை கொடுக்க முடியாததால், தம் வறுமைக்கும், வாலிப உணர்வுக்கும் வடிகாலாக விபச்சாரத்தைத் தேடிக் கொண்ட கன்னியர்கள் ஆயிரமாயிரம். இதற்குக் காரணம் சீதனத்தை உருவாக்கி, சீதனத்தை கொடுத்துக்கொண்டிருப்பவர்களே....


🔘 வாயையும் வயிரையும் கட்டிச் சேர்த்து வைத்த சொத்துக்களை வரப்போகும் கணவனுக்கு சீதனமாக கொடுத்துவிட்டு வீடிழந்து வீதிக்கு வந்து விட்ட குடும்பங்கள் ஆயிரமாயிரம்.


🔘வரதட்சணை காரணமாக 18 வயதிலிருந்தே வாழ்க்கைக்கு ஏங்கும் பெண்கள் முப்பது , முப்பத்து ஐந்து வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.


🔘இதன் காரணமாக பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர். ஏமாற்றப்படுகின்றனர். விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும், ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

   

🔘திருமண வாழ்வு கிடைக்காது என்பதால் கண்டவனுடன் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களும், வரதட்சணையை அன்பளிப்பாக கொடுப்பவர்களுக்கும் பங்கு இருக்கிறது.


🔘சீதன வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன் கூட்டியே உணர்பவர்கள், பெண் குழந்தை பிறந்ததும் தாமே தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்களும், சீதனத்தை கொடுத்து வழக்கமாக்கியவர்கள் பங்காளிகளாகின்றனர்.


🔘பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர்.


🔘 சீதனம் எனும் கொடுமையால் இன்று சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் இது போன்ற அவலங்களும், சீரழிவுகளும் ஏராளம்.


நியாயத் தீர்ப்பு வழங்கக் கூடிய இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள்.


மணமகளின் பெற்றோர்களை, உடன் பிறந்தோர்களை வறுத்தி, ஏழைகளை வதைத்து, மணமகளின் குடும்பத்தின் வாழ்க்கையை சீர்குலைத்துப் பெறப்படும் வசதிகளே இந்த சீதனமாகும். இக்கொடுமை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வதைப் பார்க்கும்போது இன்னும் என்னென்ன சீர்குலைவையெல்லாம் இதில் இழுத்து வருமோ என்று அஞ்ச வேண்டி இருக்கின்றது.


இக்கொடுமை அரங்கேறக் காரணமாக இருப்பவர்களுள் முதன்மையானவர்கள் யார்? சீதனம் கேட்கும் மணமகனின் பெற்றோர்களும், அன்பளிப்பு என்ற பெயரில் சீதனத்தை வளர்க்கும் மணமகளின் பெற்றோர்கள் அல்லவா?


*தொடரும்*


```தொகுப்பு By:- As sheikh Moulavi N.M.Ahsan(In'aamy)```


#islamic #islamlife #islamicmarriage #islamicfamily #Quran #quranlife #ProphetMuhammad 

#dowry #dowrysystem #DowryFreeMarriage #DowryCase #dowrywrapping #dowrysrilanka #dowrynintavur #சீதனம் #சீதனம்_இலங்கை #சீதனம்_நிந்தவூர் #வரதட்சணை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை

சீதனம் வேண்டும், சீதனம் இன்றி திருமணம் இல்லை